எல்ல விபத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் : பேருந்து குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்!!

1030

இலங்கையை உலுக்கிய பதுளை – எல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்த சிலரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இந்த கோர விபத்தில் தங்காலை நகர சபை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து எல்ல-வெல்லவாய பிரதான சாலையில் (04.09) கவிழ்ந்ததில் தங்காலை நகர சபை செயலாளர், 12 நகர சபை ஊழியர்கள், இரண்டு குழந்தைகள் மற்றும் பேருந்து ஓட்டுநர் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் விபத்துக்குள்ளான பேருந்து, 2023 ஆம் ஆண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் பதிவு ரத்து செய்யப்பட்டிருந்ததாக போக்குவரத்து பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் பேருந்துகளை ஒழுங்குபடுத்துவதற்கு எவ்வித சட்டங்களும் இதுவரை அறிமுகப்படுத்தப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

குறித்த வீதியில் விபத்துகளைக் குறைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கிடையில், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் குழு ஒன்று விபத்தில் சிக்கிய பேருந்தை ஆய்வு செய்ய அந்த இடத்திற்கு விஜயம் செய்துள்ளது.

மேலும், தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் (NTMI) மற்றும் போக்குவரத்து அமைச்சின் வீதி பாதுகாப்புத் திட்டத்துடன் இணைந்த அதிகாரிகள் குழு, இன்று (06) எல்ல பகுதிக்குச் சென்று விபத்தில் சிக்கிய பேருந்தை ஆய்வு செய்யவுள்ளதாக வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

அதேவேளை பதுளை – பேருந்து விபத்தின் போது உயிரிழந்தோரின் உடலங்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் (05.09) இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார் .