
நண்பர்கள் 3 பேரும் விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் நெல்லையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், நெல்லை டவுன் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தென்காசிக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது.
அந்தப் பேருந்து சந்திப்பு பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஈரடுக்கு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது டவுன் பகுதியில் இருந்து நெல்லை சந்திப்பு நோக்கி ஒரே மோட்டார் சைக்கிளில் 3 இளைஞர்கள் வந்தனர்.
ஈரடுக்கு மேம்பாலத்தில் வந்த போது மோட்டார் சைக்கிள் மீது அரசுப்பேருந்து எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.
இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நெல்லை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் உயிரிழந்த இளைஞர்கள் நெல்லை டவுன் வையாபுரி நகரில் வசித்து வரும் லோகேஷ்,
முகமது அலி தெருவி வசித்து வரும் சாதிக், சந்தோஷ் என்பது தெரியவந்தது. இந்நிலையில் பலியான 3 பேர் பற்றிய உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி விபத்தில் உயிரிழந்த லோகேஷ் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்திலும், சாதிக் ஒரு ஓட்டலிலும் பணிபுரிந்து வந்தனர்.
சந்தோஷ் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர்கள் 3 பேரும் நண்பர்கள். சந்தோஷ் நேற்று முன்தினம் காலையில் ஊருக்கு வந்திருந்தார்.
நீண்டநாள் கழித்து விடுமுறைக்கு நண்பன் வந்துள்ளதால் 3 பேரும் ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
நேற்று முன்தினம் இரவில் பாளையங்கோட்டைக்கு பானிபூரி சாப்பிடுவதற்காக 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றிருந்த போது தான் இந்த கோர விபத்து நடந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது





