இலங்கையில் குரங்குகளைக் கொல்வது  பிரச்சினைக்கு தீர்வாகாது!!

443

Monkeyகாத்தான்குடியில் மக்களுக்கு தொல்லை கொடுத்துவரும் குரங்குகளை சுட்டுக் கொல்வது இந்தப் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வாகாது என இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக குரங்கினங்களை ஆராயும் நிபுணர் சுனில் ஜெயதிலக தெரிவித்துள்ளார்.

வீடுகள் மற்றும் கடைகளில் புகுந்து தொல்லை கொடுக்கும் குரங்குகளை சுட்டுத்தள்ள அரசிடம் துப்பாக்கியை கேட்டுள்ளது காத்தான்குடி நகரசபை. இப்பிரதேசத்தில், இந்த ஆண்டு மட்டும் 45 சிறுவர்கள் உட்பட சுமார் 75 பேர் குரங்குகளின் கடிக்குள்ளாகி காயமடைந்துள்ளார்கள்.

ஆண்டு முழுவதும் உணவும் நீரும் கிடைப்பதால்தான் குரங்குகள் நகர்பகுதிக்கு வருகின்றன என்று சுட்டிக் காட்டும் சுனில் ஜெயதிலக, பொதுமக்கள் குரங்குகளுக்கு உணவை அளிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் மீதமான உணவுகள்கூட குரங்குகளுக்கு கிடைக்காமல் இருக்கும்படி செய்தால் இநதப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் கூறுகிறார்.

காத்தான்குடியில் அதிக அளவில் காணப்படும் அனுமன் குரங்குகள் அழியும் நிலையில் இல்லையென்றாலும், மக்களிடம் துப்பாக்கியை கொடுத்தால், அதிக அளவிலான குரங்குகள் கொல்லப்பட வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இந்தியாவின் பல நகரங்களில் குரங்குகளின் தொல்லை இருக்கிறது. குரங்குகளைக் கொல்ல மத மற்றும் கலாச்சார ரீதியான எதிர்ப்புகள் இருப்பதால் பெரும்பாலும் குரங்குகள் பிடிக்கப்பட்டு வேறு இடத்துக்கு கொண்டுபோய் விடப்படுகின்றன. இது போல செய்வது கூட இந்த பிரச்சினைக்குத் தீர்வாகாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.