காதலியின் வீட்டில் காதலர்கள் இருவரும் உயிரை மாய்த்த சோகம்!!

571

காதலுக்கு இருவரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், 10ம் வகுப்பு மாணவியின் வீட்டில் ஜோடியாக இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் ராஜபாளையத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரராஜா. வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் இவருடைய மனைவி நாச்சியார்.

இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருந்த நிலையில் மூத்த மகள் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் இறந்து விட்டார். இளைய மகள் ராஜபாளையத்தில் உள்ள ஒரு பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டியன்-குருபாக்கியம் தம்பதியின் மகன் ஆகாஷ் (22). எலக்ட்ரீசியன். முத்துப்பாண்டியன் இறந்து விட்டார்.

இந்நிலையில் கடந்த 6 மாதமாக ஆகாஷூம், மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு இருவரின் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நேற்று மாணவி மட்டும் வீட்டில் இருந்தார்.

இதை அறிந்து அவரது வீட்டுக்கு ஆகாஷ் வந்தார். பின்னர் இருவரும் தற்கொலை செய்து கொள்ளும் விபரீத முடிவு எடுத்து, மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

வெளியே சென்றிருந்த நாச்சியார் வீட்டிற்கு வந்த போது மின்விசிறியில் இருவரும் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார்.

உடனே அக்கம்பக்கத்தினர் திரண்டனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மாணவியின் உடலை சிவகாசி அரசு மருத்துவமனைக்கும்,

ஆகாஷ் உடலை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆலங்குளம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.