
திரையரங்கிற்கு படம் பார்க்க கணவன் தன்னை அழைத்து செல்லாததால், 21 வயதான புதுப்பெண் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் படியாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜீவா. சரக்கு ஆட்டோ டிரைவர். அவருடைய மனைவி சவுமியா. இவர், காங்கயத்தில் உள்ள செருப்பு கடையில் வேலை செய்து வந்தார். இவர்கள் 2 பேருக்கும், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
புதுப்பெண்ணான சவுமியா, தனது கணவர் ஜீவாவிடம் சினிமா பார்க்க தியேட்டருக்கு அழைத்து செல்லுமாறு கடந்த ஒருவாரமாக வற்புறுத்தி வந்தார்.
ஆனால் அவர், வேலை காரணமாக மனைவியை சினிமா பார்க்க அழைத்து செல்லாமல் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து சவுமியா, தனது தாயிடம் செல்போனில் கூறி அழுதார்.
மேலும், மிகுந்த மனவேதனையில் அவர் இருந்தார். நேற்று காலை ஜீவா சரக்கு ஆட்டோவை எடுத்துக் கொண்டு வேலை விஷயமாக காங்கயம் சென்று விட்டார்.
சவுமியா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவர், திடீரென வீட்டின் விட்டத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தொங்கினார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த ஜீவா, மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே சவுமியா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





