
மனைவியை கொலை செய்துவிட்டு பேஸ்புக் லைவ்வில், மனைவியைக் கொலை செய்ததாக கணவன் அறிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேஸ்புக் லைவ்வில் கொலை செய்ததை அறிவித்துவிட்டு, காவல் நிலையத்திற்கு சென்ற கணவன், தன்னுடைய மனைவியை கொலை செய்துவிட்டதாக சரண் அடைந்தார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூரை சேர்ந்தவர் ஐசக். இவரது மனைவி ஷாலினி (39). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில், ஷாலினியின் நடத்தையில் ஐசக் சந்தேகப்பட்டுள்ளார். ஷாலினி தனக்கு தெரியாமல் நகைகளை அடகு வைத்ததாகவும் ஐசக் குற்றஞ்சாட்டி வந்தார்.
தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்த நிலையில், வீட்டை விட்டு வெளியேறிய ஷாலினியின் வல்லக்கோட்டில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் ஐசக் இன்று ஷாலினியின் வீட்டிற்கு சென்று, அங்கு சமையலறைக்கு வெளியே நின்று கொண்டிருந்த ஷாலினியை,
தான் கொண்டு சென்ற கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த ஷாலினி பரிதாபமாக உயிரிழந்தார்.
தப்பிச் சென்ற ஐசக், தனது செல்போனில் பேஸ்புக்கில் லைவ் வீடியோவில் மனைவியை கொலை செய்து விட்டதாக அறிவித்தார். மேலும், புனலூரில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்ற ஐசக் மனைவியை கொலை செய்து விட்டதாக சரண் அடைந்தார்.
உடனடியாக ஐசக்கை கைது செய்த போலீசார், ஷாலினியின் வீட்டிற்கு சென்று, அங்கு ஷாலினி சடலமாக கிடந்த நிலையில் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து ஐசக்கிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





