
கொழும்பில் பேருந்தில் மயங்கி விழுந்த பெண்ணிடமிருந்து 315,000 ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடப்பட்டதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
களுபோவில போதனா வைத்தியசாலையில் குறித்த பெண் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் முகாமையாளராக பணியாற்றியுள்ளார்.
பெண்ணின் கணவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். அவரது மனைவி 14 ஆம் திகதி ஹேவ்லாக் சிட்டி அருகே பேருந்தில் இருந்து விழுந்ததை அடுத்து, பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அவரை முச்சக்கர வண்டியில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

நோயாளி மயக்கமடைந்ததால், மருத்துவமனை ஊழியர்கள் தங்க வளையல், ஒரு ஜோடி காதணிகள், பல பிளாஸ்டிக் வளையல்கள் மற்றும் அவர் அணிந்திருந்த ஒரு மெட்டியை அகற்றி அவரது கணவரிடம் ஒப்படைத்தனர்.
இரண்டு நாட்களின் பின்னர் மனைவி சுயநினைவு பெற்ற பிறகு, அவரது நகைகள் பற்றி கேட்டபோது இந்த பொருட்கள் அவரிடம் காட்டப்பட்டன. அங்கு, அவர் இரண்டு தங்க வளையல்கள் மற்றும் இரண்டு வெள்ளி கொலுசுகளை அணிந்திருந்ததாக கூறினார்.

அதற்கமைய, மருத்துவமனை ஊழியர்கள் சுமார் 300,000 ரூபாய் மதிப்புள்ள தங்க வளையலையும், 15,000 ரூபாய் மதிப்புள்ள வெள்ளி மெட்டியையும் திருடிச் சென்றிருக்கலாம் என கணவர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். சம்பவம் குறித்து கொஹுவாலா பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





