வவுனியா மாநகரசபையின் முக்கிய தேவைப்பாடுகளை உடன் நிவர்த்தி செய்க – சத்தியலிங்கம் எம்.பி அரசாங்கத்திடம் கோரிக்கை!!

1450

வவுனியா மாநகரசபையின் முக்கிய தேவைப்பாடுகளை உடன் நிவர்த்தி செய்ய நடவடிக்கையெடுக்குமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (24.09.2025) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்திருந்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்திருந்ததாவது,

வவுனியா நகரசபையானது மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்டுள்ளமை
வரவேற்கப்பட வேண்டிய விடயம், ஆனால் வெறும் பெயர்ப்பலகையில் மட்டுமே மாநகரசபையாகவுள்ளது. ஒரு மாநகர சபைக்கான வளங்கள் அங்கு இல்லை. மாநகர சபைக்கான ஆளணிகள் நிரப்பப்படவில்லை, வேலைப்பகுதியில் ஆளணி பற்றாக்குறை நிலவுகின்றது. அன்றாட கழிவகற்றல் செயற்பாடுகளுக்கு போதுமான வாகன வசதிகள் இல்லை.

வவுனியா நகரம் வளர்ந்துவரும் நகரமாகும். அங்கு தீயணைப்பு பிரிவின் முக்கியத்துவம் தேவைப்படுகின்றது. எனினும் மாநாகரசபையில் தனியான தீயணைப்பு பிரிவு ஸ்தாபிக்கப்படவில்லை. தீயணைப்பு வாகனமொன்றும், அம்புலன்ஸ் வாகனமொன்றும் இருந்தாலும் கூட போதுமான ஆளணி இல்லை.

இதே நிலைமை ஏனைய பிரதேச சபைகளிலும் காணப்படுகின்து. எனவே மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக உள்ளூராட்சி மன்றங்களின் இயலுமையை மேம்படுத்த விசேட திட்டமொன்றினை வகுக்கவேண்டுமென இந்த உயரிய சபையில் கோரிக்கை முன்வைக்கின்றேன் என தெரிவித்தார்.