
உத்தரப் பிரதேசம் கான்பூரில், கணவன்-மனைவிக்கு இடையே நடந்த சண்டையில் மனைவி தனது கணவனின் காதைக் கடித்துக் குதறியுள்ளார். விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு வீட்டில், கணவன்-மனைவிக்கு இடையே நடந்த சண்டையில், மனைவி தனது கணவனின் காதைக் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமித் சோன்கர் தனது மனைவி சாரிகாவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தனது வலது காதை கடித்து குதறியதால், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
“அவள் என் காதை தன் பற்களால் கடித்து துண்டித்தாள். அவள் என்னுடன் வாழ விரும்பவில்லை. அவள் பணம் மற்றும் வீடு கிடைத்தவுடன் என்னைப் பிரிந்து செல்லும்படி வற்புறுத்துகிறாள்.
ஆனால் நாங்கள் காய்கறி வியாபாரம் செய்து வாழும் ஏழைகள். அவ்வளவு பணம் எங்களுக்கு எங்கிருந்து கிடைக்கும்?” என்று அமித் சோன்கர் வருத்தத்துடன் கூறினார்.
அவர் சோபாவில் படுத்திருந்தபோது, மனைவி சண்டையிட்டு தன்னைத் தாக்கியதாக சோன்கர் தெரிவித்தார். “திங்கள்கிழமை, வீட்டில் சுத்தம் செய்யும் பணி நடந்து கொண்டிருந்தது.
அவள் ஆத்திரமடைந்து, நான் சோபாவில் தூங்கிக்கொண்டிருந்தபோது சண்டையிட ஆரம்பித்தாள். என்னைப் பாதுகாக்க நான் அவளைத் தள்ளினேன், அதன் பிறகு அவள் என்னை அடித்தாள்.
பின்னர் அவள் கட்டிலில் நின்று கொண்டிருந்தபோது, நான் கீழே நின்றேன், அப்போது என் காதை அவள் கடித்து விட்டாள்,” என்று அவர் கூறினார். மேலும், மனைவி தன்னை ஒரு கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்த தம்பதியினர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவரும் பிரிந்து வாழ முடிவெடுத்து, விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
காதில் கட்டுடன் இருந்த கணவர், தனது மனைவியுடன் வாழ விரும்பவில்லை என்று கூறி, அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அதேபோல, மனைவி சாரிகாவும், கணவர் மீது வன்முறை புகார் அளித்துள்ளார்.
“கணவன்-மனைவிக்கு இடையே விவாகரத்து வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளது. இந்த மோதல் ஒரு சண்டையாக மாறியது.
சாரிகாவின் புகாரின் பேரில், அமித் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இரு வழக்குகளும் விசாரணையில் உள்ளன,” என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.





