நான் உயிருடன் இருக்கிறேன் : தனது இறுதிச்சடங்கிற்கு வந்த இளைஞரால் உறைந்துபோன உறவினர்கள்!!

915

அர்ஜென்டினாவில் இளைஞர் ஒருவர் நான் உயிருடன் இருக்கிறேன் என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் மதுபோதையில் இருந்த தனது 22 வயது மகன் காணாமல் போனதாக பெண்ணொருவர் பொலிஸில் புகார் அளித்துள்ளார்.

அதே சமயம் இளைஞர் ஒருவர் கரும்பு லொறி மோதியதில் உடல் சிதைந்து உயிரிழந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து அவரது உடைகள் மற்றும் சில உடல் அம்சங்களைக் கொண்டு, அது தனது மகன்தான் என குறித்த பெண் அடையாளம் கூறியிருக்கிறார்.

அதன் பின்னர் அவரது வீட்டில் இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது இறந்துவிட்டதாக கூறிய இளைஞர் அங்கு வந்திருக்கிறார்.

இதனைக் கண்டவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பின்னர் பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

ஆல்டெரெட்ஸில் பல நாட்கள் மதுபோதையில் இருந்ததாகவும், தான் இறந்துவிட்டதாக கூறப்பட்டது தெரியாது என்று குறித்த இளைஞர் தெரிவித்திருக்கிறார்.

பின்னர் சவப்பெட்டியில் இருப்பது யார் என்று விசாரித்தபோது, டெல்ஃபின் கல்லோ நகரைச் சேர்ந்த 28 வயதான மாக்சிமிலியானோ என்ரிக் என்பது அடையாளம் காணப்பட்டது.

இறுதியில் அவரது குடும்பத்தாரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு, சொந்த ஊரில் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

இந்த நிலையில் எப்படி குழப்பம் ஏற்பட்டது? எங்கு தவறு நடந்தது? என்பதை தீர்மானிக்க, அர்ஜென்டினா அரசு வழக்கறிஞர் அலுவலகம் உள் விசாரணையைத் தொடங்கியுள்ளது.