போலி நகையை அடகு வைத்து மோசடி : தலைமறைவான இளம்பெண்!!

335

போலி நகையை அடகு வைத்து மோசடி செய்து விட்டு, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு தப்பித்து சென்று தலைமறைவான இளம்பெண்ணை மூன்று ஆண்டுகள் கழித்து போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் செறுவன்னூர் பகுதியை சேர்ந்தவர் வர்ஷா (32). இவர் கடந்த 2022ம் ஆண்டு கோழிக்கோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், 226 கிராம் நகைகளை அடகு வைத்து ரூ.9 லட்சம் பணம் பெற்றார்.

பின்னர் நிதி நிறுவன ஊழியர்கள் தணிக்கை செய்த போது, வர்ஷா அடகு வைத்தது போலி நகை என்பதும், ரூ.9 லட்சம் மோசடி செய்ததும் தெரியவந்தது.

இது குறித்து நிதி நிறுவனத்தினர் வர்ஷாவிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு ஸ்கூட்டரில் அற்றப்புழா பாலம் அருகே சென்றார்.

அங்கு ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு தப்பி சென்றார். இது குறித்து நிதி நிறுவன உரிமையாளர்கள் கோழிக்கோடு காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன் பேரில் போலீசார், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் இணைந்து விசாரணை நடத்தினர். மேலும் தலைமறைவான வர்ஷாவை தேடி வந்தனர்.

இந்நிலையில் வர்ஷா தனது குடும்பத்தினருடன் வாட்ஸ்-அப் செயலி மூலம் பேசி வந்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தியதில், அவர் திருச்சூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று வர்ஷாவை கைது செய்தனர்.

பின்னர் அவர் கோழிக்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பண மோசடி வழக்கில், தலைமறைவான பெண் 3 ஆண்டுக்கு பிறகு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.