தரையிலேயே அமர்ந்து குழந்தையை பெற்றெடுத்த கர்ப்பிணி : மருத்துவமனையில் அவலம்!!

580

உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை இரவு பிரசவ வலியுடன் கர்ப்பிணி பெண் ஒருவர் வந்திருந்தார். அவருடன் உறவுக்கார பெண் ஒருவர் கூட வந்ததாக தெரிகிறது.

பிரசவம் பார்க்க மருத்துவமனையில் செலுத்த அவர்களிடம் பணம் எதுவுமில்லை. அவர்கள் மிகவும் ஏழ்மையான பின்னணியை சேர்ந்தவர்கள். இதனால் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்க மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதற்குள் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி மேலும் அதிகமாகிக் கொண்டே வந்தது. மருத்துவ பணியாளர்கள் எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை.

குறைந்தபட்சமாக ஒரு மறைவான இடத்தைக் கூட அவர்கள் ஒதுக்கி தரவில்லை. கர்ப்பிணியால் அங்கிருந்து நகர்ந்து செல்ல முடியாததால் அவர் அங்கேயே தரையில் அமர்ந்து, அந்த இடத்திலேயே குழந்தையை பெற்றெடுத்துவிட்டார்.

அது மட்டுமின்றி, குழந்தை பிறந்த பிறகு கர்ப்பிணி பெண்ணிடம் அங்கிருந்த நர்சுகள், “என்ன சுகமாக இருக்கிறதா? இன்னும் நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டுமா?” என்று நக்கலாக பேசி கிண்டலும், கேலியும் செய்துள்ளனர்.

இந்நிலையில் கர்ப்பிணிப் பெண் தரையில் அமர்ந்து பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தலைமை மருத்துவ அதிகாரி ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பணியில் இருந்த ஒப்பந்த மருத்துவர் பணிநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும், 2 நர்சுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டு இருப்பதாகவும் மாநில முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.