எப்போதும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்த்த மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்!!

403

எவ்வளவு சொல்லியும் கேட்காமல் எப்போதும் இன்ஸ்டாகிராம் செயலியைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்த சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மாமரம் பகுதியில் உள்ள தனியார் தேயிலை எஸ்டேட் குடியிருப்பில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ் குர்ரே தனது மனைவி சிமாதேவி (35) மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் என குடும்பத்தினருடன் தங்கிருந்து அதே எஸ்டேட்டில் கடந்த 1½ மாதமாக பணிபுரிந்து வருகிறார்.

இதற்கிடையே சிமாதேவி கடந்த 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். பல இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்காத நிலையில் இது குறித்து ஜெகதீஸ் குர்ரே கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் குடியிருப்புக்கு அருகே காயங்களுடன் சிமாதேவி இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில், கழுத்தை துணியால் இறுக்கி சிமாதேவி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் ஜெகதீஷ் குர்ரேக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. வீட்டில் சிமாதேவி எப்போதும் செல்போனில் இன்ஸ்டாகிராம் செயலியை தொடர்ந்து பார்த்து கொண்டே இருந்துள்ளார்.

இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 27ம் தேதி இரவு இன்ஸ்டாகிராம் பயன்படுத்த வேண்டாம் என மனைவியை ஜெகதீஷ் குர்ரே கண்டித்து உள்ளார்.

ஆனால், அவர் கேட்கவில்லை. இதனால் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜெகதீஷ் குர்ரே தனது மனைவி அணிந்திருந்த துப்பட்டாவை வைத்து, கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

பின்னர் வீட்டுக்கு பின்புறம் உள்ள இடத்தில் உடலை வீசி விட்டு, அதன் மீது துப்பட்டாவால் மூடி வைத்து உள்ளார்.

இதைத்தொடர்ந்து எதுவும் நடக்காதது போல ஜெகதீஷ் குர்ரே வீட்டிற்கு வந்து தூங்கினார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதுதொடர்பாக ஜெகதீஷ் குர்ரேவை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.