வேலை தருவதாக ஹோட்டலில் நேர்காணல் நடத்திக் கொண்டிருந்த நபர் கைது!!

303

குவைத்தில் வேலை தருவதாக கூறி நேர்காணல் நடத்திக் கொண்டிருந்த நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருநாகல் நகரில் உள்ள ஹோட்டலில் நேற்று நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இதன்போது சந்தேக நபரிடம் 03 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வேலை விண்ணப்ப படிவங்கள் மற்றும் பல ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடம் வெளிநாட்டு வேலைகளை வழங்க பதிவு செய்யப்பட்ட உரிமம் இல்லை என சோதனை நடத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் குருநாகல் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, டுபாயில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை தருவதாக வாக்குறுதி அளித்து 8 கோடி ரூபாய் மோசடி செய்த பெண் ஒருவரையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் மஹார நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கிரிபத்கொட பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொலிஸ் பிரிவில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.