டுபாயில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பாதாள உலகக்குழு உறுப்பினர் : பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்!!

479

‘பஸ் லலித்’ என்றழைக்கப்படும் பாதாள உலகக்குழு உறுப்பினரான லலித் கன்னங்கர டுபாயில் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்ததும், ஹங்வெல்ல உட்பட பல பகுதிகளில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதாள உலகக்குழு உறுப்பினரான லலித் கன்னங்கர டுபாயில் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

பெரிய அளவிலான ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள “பஸ் லலித்”, துப்பாக்கிச் சூடு மற்றும் பலரை மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

இவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டை உலுக்கிய உயிரிழந்த இரண்டு குற்றவாளிகளான சமயன் மற்றும் உரு ஜூவா ஆகியோரின் நெருங்கிய கூட்டாளியும் ஆவார். மேலும் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் டுபாயிலிருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

2022 ஆம் ஆண்டு ஹங்வெல்லவில் தொழிலதிபரைக் கொலை செய்ததாகவும், 2023 செப்டம்பர் 30 ஆம் திகதி ஹங்வெல்ல பகுதியில் மற்றொரு தொழிலதிபரைக் கொலை செய்ததாகவும்,

2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் மற்றொரு தொழிலதிபரைக் கொலை செய்ததாகவும், 2024 ஆம் ஆண்டு வஜிர நிஷாந்த மற்றும் முன்னர் கொலை செய்யப்பட்ட மன்னா ரோஷனின் சகோதரரை கொலை செய்ததாகவும்,

2025 ஆகஸ்ட் 12 ஆம் திகதி ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுங்கொடுவ மற்றும் பனா மந்திரி ஆகியோரை சுட்டுக் கொன்றதாகவும்,

2025 ஜூலை 6 ஆம் திகதி கொழும்பு இரவு விடுதியில் கோட்டஹெர போத்த மற்றும் தெமட்டகொட ருவானை கொலை செய்ய முயன்றதாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், இவர் மீது 15 கப்பம் கோரும் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

ஹங்வெல்ல, மீகொட மற்றும் கொஸ்கம பகுதிகளில் உள்ள பல தொழிலதிபர்கள் “பஸ் லலித்தின் அச்சுறுத்தல்கள் காரணமாக சமீபத்தில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதற்கிடையில், பஸ் லலித் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்ததும், ஹங்வெல்ல உட்பட பல பகுதிகளில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுவதை காண முடிந்துள்ளது. சந்தேகநபர் விரைவில் நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.