இஷாரா செவ்வந்தி கைது : அடுத்தக் கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் பொலிஸார்!!

325

இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஐந்து பேரிடம் மேலும் விசாரணைகளை நடத்துவதற்கு தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அளுத்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலைக்குப் பின்னணியில் இருந்ததாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி,

நேபாளத்தின் பக்தபூர் மாவட்டத்தில் உள்ள திப்போஸ் பூங்காவில் உள்ள ஒரு ஆடம்பரமான வீட்டில் மறைந்திருந்தபோது நேற்று முன்தினம் (13) இரவு கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபருடன் பாதாள உலக உறுப்பினர்கள் உட்பட மேலும் நான்கு பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று மாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இஷாரா செவ்வந்தி வீரசிங்க பின்புர தேவகே (26), கிளிநொச்சி- பளையை சேர்ந்த ஜீவதாசன் கனகராசா- சுரேஸ் (33), யாழ்ப்பாணம் மிருசுவிலை சேர்ந்த தக்ஷி நந்தகுமார் (23), தினேஷ் ஷ்யாமந்த டி சில்வா (49),

யாழ்ப்பாணத்தை சேர்ந்த கெனடி பஸ்தியாம்பிள்ளை- ஜே.கே.பாய் (35) மற்றும் தினேஷ் நிசாந்த குமார விக்ரம ஆராச்சிகே (43) ஆகியோரே கைது செய்யப்பட்டனர்.

இதில் இஷாரா செவ்வந்தி, உள்ளிட்ட நால்வர் கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவிலும் மற்றைய இரு சந்தேகநபர்களும் குற்றப் புலனாய்வு பிரிவின் பேலியகொட பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஆறு பேரிடமும் மூன்று பொலிஸ் குழுக்கள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றன.

தற்போது இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்குத் தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.