முச்சக்கரவண்டி கவிழ்ந்து தந்தை கண்முன்னே மகள் துடிதுடித்து பலி!!

407

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த தில்லாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். அவருக்கு 9 வயதான மகள் கிரேசிகா மற்றும் 7 வயதான மகன் லிதன் ராம் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சமீபத்தில் ராஜ்குமார் புதிய ஆட்டோ ஒன்றை வாங்கியிருந்தார். அதை குழந்தைகளுக்கு காட்டி சுற்றி வர வேண்டும் என்ற ஆர்வத்தில், நேற்று குழந்தைகளுடன் புறப்பட்டார்.

சுற்றி வந்தபோது தில்லாம்பட்டி அருகே உள்ள வெள்ளகுளம் பகுதியில் திடீரென ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் கிரேசிகா படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ராஜ்குமாரும் அவரது மகன் லிதன் ராமும் காயங்களுடன் உயிர் தப்பினர். மகளின் துயர மரணத்தால் ராஜ்குமார் திடீரென சோகத்தில் மூழ்கி, அழுது துடித்த காட்சி அங்கிருந்தவர்களின் கண்களில் நீர் வரவைத்தது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கிரேசிகாவின் உடலை மீட்டு, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதிய ஆட்டோவின் விபத்து உயிர்பலியாக மாறியுள்ளதால், திருச்சி பகுதி மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.