திடீரென்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் : 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலி!!

382

பாகிஸ்தான் எல்லைக்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பக்திகா மாகாணத்தில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஷரானா என்ற இடத்தில், அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் நடைபெறவிருந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடருக்காக, ஆப்கானிஸ்தான் வீரர்கள் தயாராகி வந்தனர்.

இந்த நிலையில், உர்குன் மாவட்டத்தைச் சேர்ந்த கபீர், சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் ஆகிய மூன்று கிரிக்கெட் வீரர்கள், பயிற்சி முடிந்து தங்களது சொந்த ஊரான உர்குனுக்குத் திரும்பியுள்ளனர். அங்கு, அவர்கள் ஒரு கூட்டத்தில் பங்கேற்றிருந்தபோது, பாகிஸ்தான் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

“பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் நடத்தப்பட்ட இந்த கோழைத்தனமான தாக்குதலில்,” இந்த மூன்று வீரர்களுடன் மேலும் ஐந்து பேரும் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை (ACB) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தத் துயரச் சம்பவத்திற்குத் தனது கடும் கண்டனத்தைத் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

“பக்திகா மாகாணத்தைச் சேர்ந்த எங்களது துணிச்சலான கிரிக்கெட் வீரர்களின் சோகமான மரணத்திற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது,” என்று ACB தனது (X) பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இதனையடுத்து, அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் நடைபெறவிருந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை (ACB) அறிவித்துள்ளது.

இருப்பினும், சில ஊடக அறிக்கைகளின்படி, கிரிக்கெட் வீரர்கள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டதாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் குறித்த மேலதிக விபரங்களை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை வழங்கவில்லை.”

பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில்”, அடுத்த மாதம் நவம்பர் 17 முதல் 29 வரை ராவல்பிண்டி மற்றும் லஹோரில் நடைபெறவுள்ள முத்தரப்பு T20I தொடரில் இருந்து விலகுவதற்கு முடிவெடுத்ததாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை கூறியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே சமீபத்தில் ஏற்பட்ட எல்லை மோதல்களைத் தொடர்ந்து, 48 மணி நேரப் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் இந்த வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக ஆப்கானிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தைத் தணிப்பதற்காக தோஹாவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம், ஆப்கானிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பெரும் கோபத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பஸல்ஹக் ஃபரூக்கி, முகமது நபி, ரசித் கான் ஆகியோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இந்தத் துயரச் சம்பவத்தால், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் உலகம் ஈடுசெய்ய முடியாத ஒரு இழப்பைச் சந்தித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) இதுவரை இந்த விவகாரத்தில் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.