பட்ட மரத்தடியில் ஓர் பருவக் குழந்தை!!

512

Tree

வெள்ளிக் கோலங்களால்
விடிந்து கிடந்தது உறவுகளின்
முற்றம்…

என் மன முற்றம் மட்டும்
இருண்டு கிடந்தது ஏனோ?

எத்தனை வயது வரை என்னைத்
தூக்கிச் சுமந்திருப்பாய்..

தாயின் மார்க்காம்பு சப்பலை விட
உன் உப்பு விரல்க் காம்பு சப்பி
சுகம் கண்ட பிள்ளையல்லவா நான்..

மயிலிறகு கனவு நான் கான
சுண்ணச் சகதி நீராடிய ஆரியகுல
அப்பன் அல்லவா நீ..

உன் உறக்கம் நான் கண்டதில்லை.
என் உறக்கம் நீ கலைத்ததில்லை..

உன் மூச்சுக் காற்று வேகம் கூட
என் மேனி தொட்டதில்லை.
ஒரு சுடு சொல் கூட எனை நோக்கி
நீ விட்டதில்லை..

அப்பாஸ் வெட்டும்
பொன்டிங் கட்டும்
நான் வைக்க
தாகூர் தாடியுடன் திரிந்த
சன்னியாசப் பரதேசி..

புத்தாடை, பட்டாடை நான் கட்ட
அழுக்கன் கைலியில்
ஊர் வலம் வந்த
ஆண்டவப் பரதேசி..

அரையில் மட்டும் துணியுடுத்தி
அங்கமெலாம் உன் கருந்தோலே
துணியாக மாற்றி
தொழில் தியாகத்தை
தியானமாக செய்த
போதி மரத்து புத்தன் நீ..

எத்தனை வேகம் காட்டி
விளைவித்தாய் சம்பாத்தியத்தை…
உணவின் உருசி புசித்த நான்
உன் உழைப்பின் பசி அறியா எனை
என்ன சொல்லி தூற்றும்
இந்த பைத்தியத்தை..

அம்மா சேலைத் தூளியை விட
அப்பா உன் மடி ஊஞ்சல் ஆடிக்
கிடந்த கிளிப் பிஞ்சு நானல்லவா..

உன் உள்ளங் கையல்லவா
என் உறக்க வாசல்.
உன் விரிந்த மடியல்லவா
என் சொர்க்க ஊஞ்சல்.
இருபது வயதிலும் எப்படியெலாம்
செய்வாய் எனைக் கொஞ்சல்.
ஐயோ ஆண்டவா.
அப்படி ஒரு ஊடல் மிஞ்சல்..

இன்னும் ஒரு ஜென்மம்
வேண்டும் படைப்போனே.
என் மகனாகி அவனோடு
ஏழு ஜென்ம உறவு கொள்வேன்
புனிதனே..

சுகத்துக்கு தலை சாய்த்த என் தலையனையோ
கணமாகி கிடக்கிறது என்
கண்ணீர் குளத்தில் சேறாடி..

ஆண் பிள்ளைதானே என
பாதி விலை பேசி துறந்தாயோ உன்
உயிர்தனை..

இன்று
பத்துக்குப் பத்து சுவற்றில் படமாகி
வதைக்கிறாயே என்
உயிர்தனை..

ஈட்டி முனையில் எப்படியப்பா
இராத்தூக்கமென
அழுது விடிந்திருக்கிறேன்
ஆங்கோர் பட்ட மரநிழலிலே
உருவம் தொலைத்த உன்
பருவ மகனாக.

-திரு-