இரண்டு தேங்காய்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்!!

630

இரண்டு தேங்காய்களை திருடியதாக கூறப்படும் நபர் ஓருவரை இரும்புக் கம்பியால் தாக்குதல் நடத்தி கொலை செய்த நபர் ஒருவருக்கு ஹோமகம நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலைக் குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ரஞ்ஜித் தர்மசேன என்பவருக்கு ஹோமகம உயர்நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க மரண தண்டனை விதித்தார்.

ஹோமகம நீதிமன்ற பிரிவிற்கு உட்பட்ட நியதகல பகுதியிலுள்ள வயலில் இரும்புக் கம்பியால் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்ததாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியங்கள் தெளிவாக குற்றவாளியை அடையாளம் காட்டுகின்றன. சாட்சிகளின் வாக்குமூலங்கள் விசாரணைகளின் போது எந்தவித முரண்பாடும் இன்றி காணப்பட்டன.

இரண்டாவது மற்றும் மூன்றாவது சாட்சிகள் இருவரும் குற்றவாளியை குற்றம் நிகழ்ந்த இடத்தில் கண்டதாகவும், பாதிக்கப்பட்டவரின் தலையில் இரும்புக் கம்பியால் அடித்ததாகவும் கூறியுள்ளனர். இச்சாட்சிகளில் எந்த சந்தேகமும் எழவில்லை என நீதிபதி தீர்ப்பின் போது தெரிவித்துள்ளார்.

நடவடிக்கையில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து சாட்சிகளையும் பரிசீலித்தபோது, குற்றவாளி ரஞ்ஜித் தர்மசேன மீது முன்வைக்கப்பட்ட கொலைக்குற்றம் நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

ஆனால் மற்ற இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை. மூன்றாவது சந்தேகநபர் வழக்கு நடைமுறையிலேயே இறந்துவிட்டார்.

எனவே இரண்டாவது சந்தேகநபர் குற்றமற்றவர் எனவும் அவரை விடுவிப்பதாகவும் தீர்மானிக்கப்படுகிறது என நீதிபதி அறிவித்துள்ளார்.

முதன்மை குற்றவாளியான ரஞ்ஜித் தர்மசேன கொலை குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது என நீதிபதி அறிவித்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய குற்றப்பத்திரிகை 2001ஆம் ஆண்டிலேயே சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.