இன்ஸ்டாகிராம் அறிமுகத்தில் காதல் : பரிதாபமாக பறிபோன இளைஞனின் உயிர்!!

323

இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமாகி, நட்பு காதலாகி, கருத்து வேறுபாட்டால் சோகமாக மாறி இளைஞர் உயிரிழந்த சம்பவம் திருவாரூர் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருதப்பட்டினம் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் (23), பிபிஏ படித்த இளைஞர். கும்பகோணம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஜெயஸ்ரீ (19) உடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி இருவரும் காதலித்து வந்தனர்.

சமீபத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், “இனி காதலை தொடர வேண்டாம்” என்று ஜெயஸ்ரீ தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உளைத்த பிரவீன் குமார் நேரில் பேச வேண்டும் எனக் கூறி, நேற்று கும்பகோணத்திற்கு சென்று ஜெயஸ்ரீயை சந்தித்து பைக்கில் திருவாரூருக்கு அழைத்துச் சென்றார்.

வழியில் திருக்கண்ணமங்கை அருகிலுள்ள சேட்டாக்குளம் கரையில் அமர்ந்து இருவரும் விவாதித்தபோது, காதலை முடிக்க ஜெயஸ்ரீ உறுதியாக இருந்ததாக தகவல்.

இதனால் மனவேதனைக்குள்ளான பிரவீன் திடீரென குளத்தில் குதித்தார். இதைக் கண்டு பதறிய ஜெயஸ்ரீ, அவரை காப்பாற்ற முயன்று தானும் குளத்தில் குதித்தார்.

அங்கிருந்த பொதுமக்கள் விரைந்து இருவரையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன் உயிரிழந்தார். ஜெயஸ்ரீக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.