
ஐதராபாத்தில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறால் மன உளைச்சலுக்கு ஆளான சாப்ட்வேர் பொறியாளர் ஒருவர், 14வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம் ஹுசூர்நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசராவ் (வயது 38), ஐதராபாத்தில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
அவர், மனைவி ஜோதி மற்றும் இரு குழந்தைகளுடன் நல்லகண்ட்லா பகுதியில் உள்ள ராங்கி கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
குடும்பத்தினர் கூறியதாவது, கடந்த சில மாதங்களாக சொத்துக்களை ஜோதி பெயரில் எழுதிக் கொடுக்க வேண்டும் என மனைவி அடிக்கடி வற்புறுத்தியதால்,
தம்பதியிடையே தகராறு அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இரு குடும்பங்களின் மூத்தோர் கலந்து சமரச முயற்சி செய்தும் பிரச்சனை தீரவில்லை.
இந்நிலையில், மன உளைச்சலுக்குள்ளான ஸ்ரீனிவாசராவ், நேற்றிரவு தாங்கள் வசிக்கும் 14வது மாடியில் இருந்து கீழே குதித்தார். அவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டதால் கீழே குதித்த வேகத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த சந்தாநகர் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், ஸ்ரீனிவாசராவின் தாய் கமலம்மா, தனது மகன் மரணத்தில் மருமகள் ஜோதி பங்குடையவர் எனக் கூறி போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், ஜோதி மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் ஐதராபாத் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப சொத்து சண்டை உயிரிழப்பாக முடிந்துள்ளதால், அந்த பகுதி மக்கள் துயரத்தில் மூழ்கியுள்ளனர்.





