கொதிக்கும் மீன் குழம்பை மனைவியின் முகத்தில் ஊற்றிய கணவன்!!

504

கேரள மாநிலம் கொள்ளத்தில், கொதித்துக் கொண்டிருந்த மீன் குழம்பை மனைவியின் முகத்தில் கணவன் ஊற்றிய நிலையில், இது குறித்த காரணம் கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

கொள்ளம் மாவட்டம் சடையமங்கலம் அருகே வைகல் பகுதியைச் சேர்ந்தவர் சஜீர். இவரது மனைவி ரஜிலா கஃபூர் (36). மனைவி. நேற்று காலை வீட்டில் இருந்த சஜீர், தனது மனைவியிடம் “முடியைத் தளர்த்திவிட்டு, தனது முன்னால் உட்காரச்சொல்லி,

மாந்திரீகர் ஒருவர் கொடுத்த ஆபரணத்தை அணிந்துக் கொள்ள வேண்டும் என்றும், சாம்பலை முகத்தில் பூச வேண்டும்” என்றும் கூறியுள்ளார். இதற்கு ரஜிலா மறுப்பு தெரிவித்துள்ளார். சமீப காலங்களாக தனது கணவர் மாந்திரீகத்தில் அதிக ஈடுபாடு காட்டி வருவதாக கூறப்படுகிறது.

தனது பேச்சுக்கு மனைவி மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த சஜீர், சமையலறையில் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த மீன் குழம்பை சட்டியுடன் தூக்கி வந்து ரஜிலாவின் முகத்தில் ஊற்றி தாக்கியுள்ளார்.

ரஜிலாவின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று, அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், “சஜீர் பலமுறை தனது மனைவியை “பிசாசு பிடித்திருக்கிறாள்” என்ற நம்பிக்கையில் தாக்கி வந்ததாகவும், இது குறித்து ஏற்கெனவே ரஜிலா போலீசில் புகார் அளித்ததாகவும் கூறினர்.

அப்போது சஜீரை அழைத்து எச்சரித்த போதிலும், பின்னர் அவர் மாந்திரீகர்களை அணுகி, மனைவிக்கு சூனியம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தற்போது பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 118(1) (அபாயகரமான பொருளை பயன்படுத்தி காயப்படுத்துதல்) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சஜீரை பிடிக்க போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.