காதலுக்காக தாயைக் கொலை செய்த பள்ளி மாணவி : காதலனுடன் சேர்ந்து திட்டம் தீட்டியது அம்பலம்!!

438

காதலுக்காக பள்ளி மாணவி தன்னுடைய தாயை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் பெங்களூரின் சுப்பிரமண்யபுரா பகுதியில் நடந்துள்ளது. சுப்பிரமண்யபுரா பகுதியில் வசித்து வந்த நேத்ராவதி என்ற பெண், கணவரை பிரிந்து தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.

கடுமையான உழைப்பில் மகளை வளர்த்த நேத்ராவதி, தன் மகளின் நலனுக்காக அனைத்தையும் தாங்கி வந்தார். ஆனால், மகள் அடிக்கடி தாயுடன் வாக்குவாதம் செய்து வந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவனுடன் மாணவிக்கு காதல் ஏற்பட்டது. இச்சிறுவன் அடிக்கடி வீட்டிற்கு வரத் தொடங்கியதும், நேத்ராவதி சந்தேகப்பட்டார்.

பின்னர், இருவரும் காதலிப்பது தெரியவந்ததால் தாய் கடுமையாக கண்டித்தார். “பள்ளியில் கவனம் செலுத்து; இவன் இங்கே வரக்கூடாது” என எச்சரித்தார்.

இதனால் கோபமடைந்த மாணவி, தாயை அகற்றிவிட்டால் தடை இருக்காது என்று எண்ணியுள்ளார். கடந்த அக்டோபர் 25ம் தேதி இரவு தாய் மது அருந்தி தூங்குவார் என்று காதலனுக்கு தகவல் அளித்துள்ளார். அதன்படி சிறுவனும், அவனது நண்பர்களும் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

அப்போது நேத்ராவதி எழுந்து அவர்களைப் பார்த்து கடிந்துக்கொண்டார். சிறுவனின் செல்போனை பிடித்து போலீசில் புகார் அளிப்பேன் என கூறியதும், அவர்கள் மூவரும் சேர்ந்து நேத்ராவதியின் கழுத்தில் துணியை சுற்றி நெரித்துள்ளனர்.

நேத்ராவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், தற்கொலை போல காட்டுவதற்காக அவரது உடலை புடவையால் சுவரில் தொங்க விட்டனர்.

சம்பவத்திற்குப் பிறகு மாணவி காணாமல் போனதால் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை ஆரம்பித்தனர். ஐந்து நாட்கள் கழித்து மாணவி வீடு திரும்பிய போது, போலீசார் விசாரித்ததில் கொலை சம்பவத்தின் முழு பின்னணியும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனையடுத்து 13 வயது சிறுவன் உட்பட மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டு சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தாயை கொலை செய்து, பெற்ற மகளே தற்கொலை போல நாடகமாடிய சம்பவம் பெங்களூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.