
வவுனியா பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் கடந்த 31 ஆம் திகதி இரவு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இருப்பினும், மாணவனின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அனுராதபுரம், ஜெயசிறிபுராவைச் சேர்ந்த 23 வயதுடைய டி.எம்.எஸ். நிர்மல் விக்ரமதாச என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விடுதியில் இருந்த போது ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், மாணவன் உயிரிழக்கும் போது அவரது உடலில் கணிசமான அளவு மது இருந்ததாக சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மாணவனின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தனது சகோதரனுக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை எனவும், 31 ஆம் திகதி இரவு பல்கலைக்கழக மாணவர் விருந்தில் மூத்த மாணவர்கள் தனது சகோதரனை மது அருந்த கட்டாயப்படுத்தியதாகவும் சகோதரர் குற்றம்சாட்டியுள்ளார்.
தனது சகோதரருக்கு வேறு எந்த மருத்துவ பிரச்சினைகளும் இல்லை என்றும், பல்கலைக்கழக பிரச்சினைகள் குறித்து அவர் பல சந்தர்ப்பங்களில் தனது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.





