
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வீட்டுமனை பார்க்கச் சென்ற இளம்பெண் ஒருவரை கும்பல் கொடூரமாக தாக்கி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அவரது நகைகள் பறிக்கப்பட்டு குற்றவாளிகள் தப்பியோடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காரைக்குடி மருதுபாண்டியர் நகரை சேர்ந்த பாண்டிக்குமார். சிங்கப்பூரில் வேலை செய்து வரும் இவரது மனைவி மகேசுவரி (38), நிலம் வாங்குவதில் ஆர்வம் கொண்டவர்.
இதற்காக இடம் பார்த்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று காலை அவர் தனது காரில் சிலரை அழைத்துச் சென்றார்.
ஆவுடைப்பொய்கை பகுதியில் வீட்டுமனை குறித்து பேசும் போது அவருக்கும் அழைத்துச் சென்ற நபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தகவல்.
இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள், மகேசுவரியின் தலையை கார் கதவில் மோத வைத்தும், கழுத்தை நெரித்தும், மகேஸ்வரியின் முகத்தில் தாக்கியும் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
பின்னர் அவரது தாலிச்சங்கிலி, மேலும் கழுத்தில் இருந்த ஒரு சங்கிலி உள்ளிட்ட சுமார் 20 பவுன் நகைகளை பறித்துவிட்டு, மகேஸ்வரியின் உடலை காருக்குள் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து புகார் பெறப்பட்டதையடுத்து குன்றக்குடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலம் வாங்கல் தகராறு காரணமா கொலை நடந்ததா? பணப் பரிவர்த்தனை சச்சரவு பின்னணியா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பதை பல்வேறு கோணங்களில் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். மேலும் தப்பிச் சென்றவர்களை பிடிக்க வலை வீசப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.





