டெல்லி கார் வெடிப்பு சம்பவம் : விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!!

285

மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் டெல்லி செங்கோட்டை பகுதியில் திங்கட்கிழமை நடந்த கார் வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பான விசாரணையில், டெல்லியில் 25/11 பாணியில் தாக்குதல் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்களும் சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

டெல்லி செங்கோட்டை அருகே காரில் வெடிபொருள் நிரப்பி வெடிக்க செய்த சம்பவத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர்.

மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் திகதி அன்று நடந்த தாக்குதல்களில், தாஜ் மஹால் ஹோட்டல், ஓபராய் டிரிடென்ட் ஹோட்டல், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ், மற்றும் லியோபோல்ட் மருத்துவமனை உட்பட 12 இடங்களில் ஒரே நேரத்தில் துப்பாக்கிச் சூடும், குண்டுவெடிப்புகளும் நடந்தன.

இதைத்தான் 26/11 தாக்குதல் என்று குறிப்பிடப்படுகிறது. அதேபோன்ற ஒரு தாக்குதல் சம்பவத்தை பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தனர். டெல்லியில் நடந்த இந்தச் சதித் திட்டம் ஜனவரி மாதத்திலிருந்தே திட்டமிடப்பட்டு வந்தது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்புடைய இந்தத் தீவிரவாதக் குழு பல மாதங்களாக இந்தத் தாக்குதலுக்குத் தயாராகி வந்தது என்று விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

இந்த பயங்கரவாதிகள் டெல்லி மட்டுமல்லாமல், குருகிராம் மற்றும் ஃபரிதாபாத் போன்ற முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்த 200 சக்திவாய்ந்த மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளை தயாரித்து வந்திருக்கின்றனர்.

மதத் தலங்களைத் தாக்கி சமூக பதற்றத்தை தூண்டுவதே பயங்கரவாதிகள் சதி செயலின் நோக்கம். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா, சோபியான் மற்றும் அனந்தநாக் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சில மருத்துவர்கள் இந்த வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் ஃபரிதாபாத்தில் தங்கள் தளத்தை அமைத்துள்ளனர்.

மருத்துவர்களாக இருந்ததால், இவர்கள் டெல்லி என்சிஆர் முழுவதும் சந்தேகம் எழாமல் எளிதாக நடமாட முடிந்தது. பிறகு, தௌஜ் மற்றும் ஃபதேபூர் தாகா பகுதிகளில் வெடி பொருட்களை சேமிக்க அறைகளை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

கார் வெடிப்பு தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அதில் ஷாஹீன் சயீத், முஸம்மில் ஷகீல் கணாலே மற்றும் ஆதீல் ரதர் என 3 பேர் மருத்துவர்கள். டாக்டர் உமர் நபி என்பவர் நவம்பர் 10 அன்று நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த தற்கொலை படையை சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது.