கட்டார் ஏர்வெய்ஸில் குழந்தை ஒன்றுக்கு நேர்ந்த கதி : தாய் எடுத்த அதிரடித் தீர்மானம்!!

625

ஒரு விமானப் பணிப்பெண் தனது எச்சரிக்கைகளைப் புறக்கணித்து, தனது இளம் மகளுக்கு பால் கலந்த சொக்கலேட் கொடுத்ததற்காக, வட கரோலினாவைச் சேர்ந்த தாய் ஒருவர் கட்டார் ஏர்வெய்ஸ் மீது 5 மில்லியன் டொலர் கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.

33 வயதான ஸ்வேதா நீருகொண்டா என்பவர், கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி வர்ஜீனியாவில் உள்ள வாஷிங்டன் டல்லஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கட்டாரின் தோஹாவிற்கு விமானத்தில் தனது 3 வயது மகளுடன் பயணம் செய்துள்ளார்.

இதன்போது குறித்த பெண், தனது குழந்தைக்கு பால் மற்றும் சொக்கலேட்டுகளால் கடுமையான ஒவ்வாமை ஏற்படும் என விமானப் பணிப்பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தாய் கழிப்பறைக்குச் சென்றபோது, ​​ஒரு பெண் விமானப் பணிப்பெண்ணிடம் தனது குழந்தையைப் பராமரிக்கும்படி அறிவித்து விட்டு சென்றுள்ளார்.

தாய் திரும்பி வந்தபோது, ​​விமானப் பணிப்பெண் குறித்த குழந்தைக்கு பால் கலந்த சொக்கலேட் பாரை ஊட்டுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக அந்த பெண் வழங்கிய குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், அந்த பெண், விமானப் பணிப்பெண்ணிடம் விசாரித்தபோது, ​​அவர் குழந்தைக்கு சொக்கலேட் கொடுத்ததாக ஒப்புக்கொண்டதுடன் “உங்களை விட எனக்கு நன்றாகத் தெரியும்” என்று உறுதியாகக் கூறியதாக அப்பெண்ணின் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

சிறிது நேரத்திலேயே, குழந்தைக்கு கடுமையான ஒவ்வாமை அறிகுறிகள் தென்படத் தொடங்கியதாகவும் குழந்தையினுடைய மனநிலை மற்றும் முக்கிய அறிகுறிகள் விரைவாக மோசமடைந்ததாகவும் அதனை தொடர்ந்து குழந்தைக்கு தடுப்பூசி போட்டதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் அந்த பெண் தொடர்ந்த வழக்கின்படி, கட்டார் ஏர்வேஸ் நடைமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், அந்த பெண் விமானத்திலிருந்து இறங்கிய பின்னர் வைத்தியசாலைக்கு சென்றதாகவும் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, நிதி இழப்பு மற்றும் குழந்தை அனுபவித்த கடுமையான வலி, துன்பம் மற்றும் உணர்ச்சி ரீதியான துயரத்தை ஈடுசெய்ய கட்டார் ஏர்வேய்ஸிடமிருந்து 5 மில்லியன் டொலர்களை குறித்த பெண் கோரியுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.