
தூத்துக்குடி சகாயபுரத்தை சேர்ந்த ஜெமீலா, 10 ஆண்டுகள் காதலித்து 2023 செப்டம்பரில் பெனோவை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு கருக்கலைப்பு நடந்ததையும்,
குழந்தை பிறக்காததையும் காரணம் காட்டி கணவன் வீட்டில் இடையறாத அவமதிப்பு, குற்றச்சாட்டுகள், ஒதுக்கல் ஆகியவற்றை எதிர்கொண்டதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.
கணவர் பெனோ ஆன்லைன் ரம்மியில் இழந்த பணத்தைக் கட்ட ஜெமீலாவின் நகைகள் அடகு வைக்கப்பட்டதும், வேலைக்கு செல்லாமல் இருந்ததும் தகராறு அதிகரித்தது.
மேலும், அவர்கள் வசித்த வீட்டை பெனோவின் தந்தை மற்றொரு மகளுக்கு எழுதித்தந்ததால், வீட்டை காலி செய்யும்படி ஜெமீலாவிடம் வற்புறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவரின் ஆலோசனைப்படி சில நாட்கள் தாய் வீட்டில் தங்கி வந்த ஜெமீலா, கணவன்–குடும்பத்தினரின் தொடர்ந்த மன உளைச்சலைத் தாங்க முடியாமல் அதிகாலை தனது வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார்.
சமையலறையில் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், “பெனோவுக்கு நான் முக்கியம் அல்ல… அவர் சகோதரிகள் தான் முதலில். அவர்களிடம் திரும்பப் போனாலும் நிம்மதி கிடையாது…” என்ற வரிகள் அனைவரையும் உருக்கின.
மேலும், தன்னை மன்னித்துவிடுமாறு தாயிடம் கேட்டு, தானும் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க இயலாத சூழலை அழுகையுடன் வெளிப்படுத்தியிருந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஜெமீலாவின் தாய் அளித்த புகாரின் பேரில்,
கணவர் பெனோ, மாமனார், மாமியார், சகோதரி, மச்சான் உள்ளிட்டோர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. காதலித்து மணந்த இரண்டாண்டுகளுக்குள் இளம்பெண் இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டது தூத்துக்குடி முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.





