வவுனியாவில் வரலாறு காணாத வெள்ளம் : வீடுகள், வியாபார நிலையங்கள் நீரில் மூழ்கின!!

1367

வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும்மழை காரணமாக வவுனியாவின் அனைத்து பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் நேற்று முதல் வரலாறு காணாத மழை பெய்துவருகின்றது. குறித்த மழை காரணமாக வவுனியா நகரப்பகுதி முற்றாக வெள்ளத்தில் மூழ்க்கியதுடன், வியாபார நிலையங்கள் மற்றும் வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது.

குறிப்பாக வைரவபுளியங்குளம், கொறவப்பொத்தான வீதி, கண்டிவீதி, மில் வீதி, பூங்கா வீதி, உட்பட பல பிரதான வீதிகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

அதேவேளை மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளதுடன், வீடுகளுக்குள்ளுக்கும் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது. இதனால் மக்கள் இடம்பெயரவேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது.

குறிப்பாக வவுனியாபிரதேச செயலகம், கடவுச்சீட்டு அலுவலகம், மாவட்ட செயலகங்களுக்குள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளமையால் பல்வேறு சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை மாவட்டத்தில் உள்ள 80 வீதத்திற்கும் அதிகமான குளங்கள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளதுடன், மேலதிக நீர் வெளியேறி வருகின்றது. இதுவரை மூன்றிற்கும் மேற்ப்பட்ட குளங்களில் உடைவு ஏற்ப்பட்டுள்ளதுடன் அது உடனடியாக சீர் செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் பெரிய குளமான பாவற்குளத்தின் நீர்மட்டமானது அதன் கொள்ளவான 19.4 அடியை தாண்டி 20.3 அடியை அடைந்துள்ளதால், அதன் நான்கு வான் கதவுகளும் 2 அடிக்கு திறக்கப்பட்டுள்ளன. அத்துடன், தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் மேலும் வான் கதவுகள் ஊடாக நீர்பாயும் வீதத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

இதனால் பாவற்குளத்தின் நீர் வழிந்தோடும் பகுதிகளில் உள்ள கந்தசாமி நகர், கிறிஸ்தவகுளம், பாவற்குளம் படிவம் 5,6,4,2,1, பீடியாபாமின் வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாகவும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்குமாறு கோரப்பட்டுள்ளதுடன், நெளுக்குளம் – நேரியகுளம் வீதி ஊடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

அதிகரித்த மழைவீழ்ச்சியால் 50 சதவீதத்திற்கும் அதிகமான நெற்பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதுடன் மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.

இதேவேளை இன்று மாலை 4 மணிவரை 328 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

கடும் மழைதொடர்ச்சியாக பெய்துவரும் நிலையில் வெள்ளப்பாதிப்புக்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதுடன் பாரிய இடப்பெயர்வு ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.