
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் கலாநிதி தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து, என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிவித்து, தமது முடிவை வழங்கும் வரை, அதாவது வீடுகளுக்குச் செல்ல முடியும் என்பதை உறுதிப்படுத்தும் வரை, மிகவும் பாதுகாப்பற்ற இடங்களில் உள்ள மக்கள் அந்த இடங்களுக்குத் திரும்ப வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, பாதுகாப்பற்ற நிலையில் இருந்த மக்கள் தொடர்ந்தும் முகாம்களிலேயே தங்கியிருக்குமாறு கலாநிதி வசந்த சேனாதீர கோரிக்கை விடுத்துள்ளார்.

7 மாவட்டங்களில் உள்ள 70 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல்களும் வெளியேறுவதற்கான சிவப்பு அறிவித்தல்களும் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், அதிக மழை பெய்த அனைத்துப் பகுதிகளிலும் நிலம் நீரால் நிரம்பியுள்ளதால், அடுத்த சில நாட்களிலும் கூட மண்சரிவு, பாறைகள் உருண்டு விழுதல், அல்லது மண்மேடுகள் இடிந்து விழுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வசந்த சேனாதீர சுட்டிக்காட்டினார்.
நிலத்திலிருந்து விநோத சத்தங்கள், அல்லது நீர் ஊற்றுகள் தோன்றுதல் மற்றும் மறைதல் போன்ற அறிகுறிகளைக் கண்டால், உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேறுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்து அமுலில் உள்ளது.





