
புதிய இணைப்பு
மன்னார் மாவட்டத்தில் இன்று (3) முதல் மறு அறிவித்தல் வரை ஆடு மற்றும் மாடு இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளது.
இந்த நிலையில் உயிரிழந்த ஆடு, மாடுகளை இறைச்சியாக்கி மன்னார் மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மிருக வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாகவும் இன்று புதன் கிழமை முதல் மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வெள்ளத்தினால் நோய்வாய்ப்பட்ட மற்றும் உயிரிழந்த ஆடு மற்றும் மாடு இறைச்சிக்காக வெட்டப் பட்டுள்மை தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
உத்தரவை மீறி ஆடு மற்றும் மாடு இறைச்சிக்காக வெட்டி விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,இவ்விடயம் தொடர்பாக பொதுமக்கள் விழிப்புடன் செயல்படு மாறும் மறு அறிவித்தல் கிடைக்கும் வரை ஆடு மற்றும் மாட்டு இறைச்சிகளை கொள்வனவு செய்ய வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு

மன்னார் சௌத்பார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மாடுகளை மன்னார் நகர சபை மீட்டு புதைத்துள்ளனர். -மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தது.

இந்த நிலையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு தொகுதி கால்நடைகள் (மாடு) கடலில் விடப்பட்ட நிலையில் குறித்த கால்நடைகள் உயிரிழந்த நிலையில் சௌத்பார் கடற்கரையில் நேற்றைய தினம் மாலை கரையொதுங்கியது.
இந்த நிலையில் அப்பகுதியில் பாரிய துர்நாற்றம் வீசிய நிலையில் மன்னார் நகர சபையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் மன்னார் நகர சபையின் தலைவர் டானியல் வசந்தன் குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டதோடு, நகர சபை பணியாளர்களின் உதவியுடன் கரையொதுங்கிய மாடுகள் மீட்கப்பட்டு கடற்கரை பகுதியில் பாரிய பள்ளம் தோண்டப்பட்டு உயிரிழந்த மாடுகள் புதைக்கப்பட்டது.





