வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குழப்பம் : மீண்டும் அதிகரிக்கும் மழை வீழ்ச்சி தொடர்பில் எச்சரிக்கை!!

340

நாட்டில் நிலவும் வடகீழக்கு பருவப்பெயர்ச்சி வானிலை காரணமாக டிசம்பர் மாதம் 9, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில் காற்றின் வேகமும் அதிகரிக்கும் என அதன் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும், இடைப் பருவப்பெயர்ச்சி வானிலையுடன் ஒப்பிடுகையில் வடகீழக்கு பருவப்பெயர்ச்சியின் போது இடியுடன் கூடிய மழை குறைவானதாகவே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீவிரமடையும் பருவப்பெயர்ச்சி

வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இந்த வடகீழக்கு பருவப்பெயர்ச்சி தீவிரமடைவதன் காரணமாக டிசம்பர் 9ஆம் திகதிக்குப் பின்னர் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என்பதோடு,

எந்நேரத்திலும் இப்பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனவும் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், இப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், 75 மி.மீ. அல்லது 100 மி.மீ. அளவிலான மழை பெய்யக்கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டின் ஏனைய மாகாணங்களில், குறிப்பாகத் தென்மேற்குப் பகுதியில் இக்காலப்பகுதியில் இடியுடன் கூடிய மழை இல்லாவிட்டாலும் மழை பெய்யக்கூடும் எனவும் அதுல கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

வளிமண்டலத்தளம்பல் நிலை

இதனிடையே, இலங்கைக்குத் தென்கிழக்குத் திசையில் வளிமண்டலத் தளம்பல் நிலை காணப்படுவதாகவும், ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை இந்நிலை நீடிக்கக்கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை உருவானமை வடகீழக்கு பருவப்பெயர்ச்சி தீவிரமடைவதற்குக் காரணமாக அமைந்துள்ளதென குறிப்பிட்ட அதுல கருணாநாயக்க,

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள இந்தத் தளம்பல் நிலை இலங்கைக்குத் தொலைவில் தென்கிழக்குத் திசையில் அந்தமான் தீவுகளுக்கு அருகில் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக டிசம்பர் 9ஆம் திகதிக்குப் பின்னர் கடல் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என்பதால், மீனவர்களும் கடற்பயணிகளும் எதிர்கால அறிவித்தல்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுளள்னர்.