
தென்காசி மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர், ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த மனவேதனையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், சிவகிரி அம்பேத்கர் தெற்குத் தெருவைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மனைவி பொன் ஆனந்தி (26).
இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. பொன் ஆனந்தி கடையநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்தார்.
கணவர் பிரகாஷ் கோயம்புத்தூரில் வேன் டிரைவராகப் பணிபுரிவதால், குழந்தை பாசூர்சத்திரம் அருகேயுள்ள பெற்றோர் வீட்டில் வளர்ந்து வருகிறது.
நேற்று முன்தினம் (டிசம்பர் 4) பொன் ஆனந்தியின் மாமியார் செல்வி வீட்டிற்குச் சென்றபோது, கதவு நீண்ட நேரமாகத் திறக்கப்படாததால், மற்றொரு சாவியைக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது பொன் ஆனந்தி வீட்டில் தூக்குப் போட்டுத் தொங்கிய நிலையில் பிணமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
சம்பவம் குறித்துத் தகவலறிந்த சிவகிரி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவரது அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், “என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை,
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளேன்” எனப் பொன் ஆனந்தி உருக்கமாக எழுதியிருந்ததாகப் போலீசார் தெரிவித்தனர். போலீசார் விசாரணையில்,
பொன் ஆனந்தி தனது பணிக்கு மத்தியில் அடிக்கடி ஆன்லைனில் விளையாடியதாகவும், அதில் ₹63 ஆயிரம் வரை இழந்ததால் மனவேதனையில் இருந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
திருமணமாகி மூன்றரை ஆண்டுகளே ஆவதால், சங்கரன்கோவில் உதவி கலெக்டர் அனிதா தலைமையிலும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.





