உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக யாழ்ப்பாண தமிழர் நியமனம்!!

123

உலகநாடுகளில் உள்ள அனைவரையும் இணைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை வழங்க வேண்டும் எனும் உயரிய நோக்கத்தை கொண்ட சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் புதிய தலைவராக யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட பேராசிரியர் தவம் தம்பிப்பிள்ளை பொறுப்பேற்றுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (6) சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்வில் அவர் தனது பதவியைப் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் கைதடி மண்ணின் மைந்தனும், புனித பரியோவான் கல்லூரியின் பழைய மாணவரும் மருத்துவ உலகில் நன்கு அறியப்பட்டவருமான தவம் தம்பிப்பிள்ளை தற்போது அமெரிக்காவின் சான்போர்ட் மருத்துவமனையில் உறுப்பு மாற்று சத்திரசிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார்.

அதேசமயம் இவர் அடிக்கடி இலங்கைக்கு வருகை தந்து பல்வேறு சுகாதார நலத்திட்டங்களுக்கு உதவி செய்து வருவதோடு, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) சிறுநீரக மாற்று சிகிச்சை திட்டம் ஆரம்பிக்க காரணமான முக்கிய நபராக விளங்குகிறார்.

அமெரிக்க மருத்துவ உதவி நிதியத்தின் (IMHO) உறுப்பினராக கடந்த 20 ஆண்டுகளாக இலங்கையில் பல தொண்டுப்பணிகளில் ஈடுபட்டு பல்வேறு சேவைகளை செய்து வருகிறார்.

IMHO இலங்கையில் பல்வேறு சுகாதார, கல்வி மற்றும் வலுவிழந்தவர்களுக்கு பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் திட்டங்களை செயற்படுத்தி வருகிறது.

பேராசிரியர் தவம் தம்பிப்பிள்ளை சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் அமையத்தின் (International College of Surgeons) உலக அமைப்பின் தலைவராக அறிமுகப்படுத்தப்பட்டமை இலங்கைக்கும் யாழ்ப்பாண தமிழர்களுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.