மகளின் கையை கயிற்றால் கட்டி கால்வாயில் வீசிய தந்தை : 2 மாதத்திற்குப் பின்னர் உயிருடன் திரும்பியதால் அதிர்ச்சி!!

29

பஞ்சாப்பில் தந்தையால் கால்வாயில் வீசப்பட்டதாக கூறப்பட்ட சிறுமி 2 மாதங்களுக்கு மீண்டும் திரும்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 29ம் திகதி பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுர்ஜித் சிங் என்ற தந்தை அவரது நான்கு மகள்களில் மூத்த மகளான 17 வயது சிறுமியை கயிற்றால் கைகளை கட்டி சீறி ஓடும் கால்வாய் நீரில் தள்ளி விட்டுள்ளார்.

இதையடுத்து சிறுமியை கண்டுபிடிக்க முடியாததை தொடர்ந்து, அவர் இறந்து விட்டதாக கருதப்பட்டது.

மகளின் ஒழுக்கத்தில் சந்தேகமடைந்து தந்தை சுர்ஜித் சிங் இந்த செயலை செய்ததாக கூறப்படும் நிலையில், 17 வயது சிறுமியை நீரில் தள்ளியதை அவரது தாய் மற்றும் சகோதரிகள் நேரில் பார்த்ததாக கூறப்படுகிறது.

சிறுமி காணாமல் போனதை அடுத்து அவரது உறவினர்கள் வழங்கிய புகாரின் பேரில், பெரோஸ்பூர் நகர காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து தந்தை சுர்ஜித் சிங்கை கைது செய்தனர்.

இந்நிலையில் காணாமல் போனதாக கருதப்படும் சிறுமி கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகு அதிர்ச்சியூட்டும் விதமாக ஊடகங்களின் முன்பு தோன்றியதோடு, அவரது தந்தையை சிறையில் இருந்து விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

உயிர் பிழைத்த சம்பவம் குறித்து பேசிய சிறுமி, கால்வாயில் இருந்த அதிகமான நீரோட்டம் காரணமாக கையில் கட்டப்பட்டு இருந்த கயிறு தளர்ந்ததாகவும், ஒரு இரும்பு தடியின் மீது தன்னுடைய தலையை இடித்து கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பிற்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த இரும்பு கம்பி தான், தன்னுடைய உயிரை காப்பாற்றியதாகவும், அதை இறுக்கமாக பிடித்துக் கொண்டு கால்வாய் கரையை அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதிர்ஷ்டவசமாக கால்வாய் கரையில் இருந்த மூன்று தன்னை மீட்டு உயிரை காப்பாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் கடந்த இரண்டு மாதங்களாக தங்கியிருந்த இடம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.

அதே சமயம், தன்னுடைய இளைய சகோதரிகள் தற்போது காப்பாளர்கள் இல்லாமல் இருப்பதாகவும், அதனால் தன்னுடைய தந்தையை விடுவிக்க வேண்டும் என்றும் சிறுமி கோரிக்கை விடுத்துள்ளார்.