
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே, தான் கல்வி உதவித்தொகையைச் சேமித்து ஆசையாக வாங்கி வளர்த்த செம்மறி ஆடு கனமழையால் இறந்த சோகத்தைத் தாங்க முடியாமல்,
18 வயது ஐ.டி.ஐ. மாணவர் ஒருவர் பூச்சிகொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களைத் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள மைலி இலுப்பைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியின் மகன் செந்தில்குமார் (18).
இவர் அரசு ஐ.டி.ஐ.-யில் மெக்கானிக்கல் பிரிவில் படித்து வந்தார். படிப்புக்காக இவருக்கு மாதந்தோறும் வந்த கல்வி உதவித்தொகையைச் சேமித்து, செம்மறி ஆடு ஒன்றை வாங்கி ஆசையாக வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக அந்த ஆடு திடீரென இறந்து போனது. இதனால் செந்தில்குமார் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார்.
ஆடு இறந்த சோகத்தைத் தாங்க முடியாமல், திடீரென விபரீத முடிவெடுத்துச் செந்தில்குமார் பூச்சிகொல்லி மருந்தைக் குடித்தார். இதைக் கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு முதலில் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கும்,
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றிச் செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து நரிக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





