
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. 5 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 3 போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.
முதல் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. கார்டிப்பில் நடந்த 2வது போட்டியில் 133 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், நாட்டிங்காமில் நடந்த 3வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், பர்மிங்காமில் நடந்த 4வது போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.
இன்றைய ஆட்டத்திலும் இந்தியாவின் அதிரடி நீடிக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் தொடரை 1–3 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி ஒருநாள் தொடரை 4–0 என்ற கணக்கில் கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.
டெஸ்ட் போட்டியில் மோசமாக விளையாடிய இந்திய வீரர்கள் ஒருநாள் தொடரில் சிறப்பாக ஆடி வருகிறார்கள். இதே உத்வேகத்துடன் ஆடி கடைசி ஆட்டத்திலும் வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இரு அணிகளும் மோதுவது 91வது போட்டியாகும். இது வரை நடந்த 90 போட்டிகளில் இந்தியா 50 போட்டியிலும், இங்கிலாந்து 35 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.





