இலங்கை இன்னும் ஆபத்தான நிலையில் : விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!!

61

நாட்டின் 4 மாவட்டங்களில் உள்ள 33 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட நிலச்சரிவு வெளியேற்ற சிவப்பு அறிவிப்புகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO)நீட்டித்துள்ளது.

கடந்த சில நாட்களாக பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்ததால் இந்த நிலச்சரிவு சிவப்பு அறிவிப்புகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) மூத்த புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

மீகஹகிவுல மற்றும் டெமோதர பகுதிகளில் நேற்று (11) நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொடர்புடைய பகுதிகளில் ஆபத்தான சூழ்நிலை இருப்பதால், வானிலை முன்னறிவிப்பைக் கருத்தில் கொண்டு, நிலை 2 இன் கீழ் வழங்கப்பட்ட நிலச்சரிவு எச்சரிக்கை, 5 மாவட்டங்களில் உள்ள 38 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் நடைமுறையில் உள்ளது.

மேலும், நிலை 1 இன் கீழ் வழங்கப்பட்ட நிலச்சரிவு எச்சரிக்கை மூன்று மாவட்டங்களில் உள்ள 17 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

இந்த எச்சரிக்கைகள் மாறக்கூடும் என்பதால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே பல உயிர்கள் பலியாகியுள்ள சூழலில், பேரிடர் மேலாண்மை மையம், நீர்ப்பாசனத் துறை, கட்டிட ஆராய்ச்சி நஜறுவனம் அல்லது வானிலை ஆய்வு நிலையம் ஆகியவற்றால் வெளியிடப்பட்ட எச்சரிக்கைகளுக்கு மக்கள் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்றும்,

இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை மீண்டும் ஏற்படாமல் தடுக்க வழங்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றுமாறு மக்களை வலியுறுத்தியுள்ளார்.

நவம்பர் 20 ஆம் திகதி முதல் இன்று (12) வரை, ஆபத்தான இடங்களை ஆராய தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 2,716 கோரிக்கைகள் வந்துள்ளன, அவற்றில் 589 கோரிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

நாட்டில் தற்போது நிலவும் பேரிடர் சூழ்நிலையில் செய்ய வேண்டிய சிறந்த விஷயம், தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து பாதுகாப்பான இடத்தில் தங்குவது தான்.

வார இறுதி சுற்றுலா செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மக்களிடமிருந்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

நாடு இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பதால், “இது சுற்றுலா செல்வதற்கான வாய்ப்பல்ல… நாம் ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறோம்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.