நள்ளிரவில் இடம்பெற்ற விபத்து : முச்சக்கரவண்டயில் காட்டுப்பன்றி மோதியதில் இருவர் காயம்!!

140

அதிக வேகத்தில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, காட்டுப்பன்றியுடன் மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில், மல்லிப்பு சந்திக்கு அருகில் நேற்று (16.12.2025) நள்ளிரவு 12.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கினிகத்தேனை பகுதியிலிருந்து கொட்டகலை பகுதியை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டி அதிக வேகத்தில் பயணித்துள்ளதாகவும், இதன்போது வீதியின் குறுக்கே பாய்ந்த காட்டுப்பன்றியின் மீது மோதியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டிக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களைப் பொலிஸாரும், வீதியில் பயணித்தவர்களும் இணைந்து மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.