
வவுனியா நகர்ப் பகுதியில் முறையான அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள சிறிய வியாபார நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என வவுனியா மாநகர சபை ஆணையாளர் மே.சாந்தசீலன் தெரிவித்துள்ளார்.
வவுனியா நகரப் பகுதியில் உள்ள அரச காணியில் முறையான அனுமதியின்றி சிறிதாக அமைக்கப்பட்டிருந்த வர்த்தக நிலையம் ஒன்றை பெரிதாக கட்டும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில்,
கடந்த நவம்பர் மாதம் 10ஆம் திகதி இதனை அகற்றுவதற்கு மாநகரசபையினர் முற்பட்ட போதும் சட்டரீதியான சரியான முன்னாயத்த நடவடிக்கையினை செய்ய தவறியதன் காரணமாக அதனை அகற்ற முடியவில்லை.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

மேலும், மாநகரசபையினால் குறித்த அபிவிருத்தியினை மேலும் மேற்கொள்ளாமல் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், நேற்றையதினம் குறித்த வியாபார நிலையத்திற்கான கூரை தகடுகள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, மாநகர சபை ஆணையாளர் மே.சாந்தசீலனிடம் கேட்ட போதே, குறித்த வியாபார நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
மேலும், குறித்த வியாபார நிலையத்திற்கு எதுவித அனுமதியும் எங்களால் வழங்கப்படவில்லை என்றும், இது தொடர்பாக நேற்றையதினம் வர்த்தக சங்கத்தினாலும் எமக்கு தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், குறித்த தரப்பினர் பள்ளிவாசலின் குத்தகை பத்திரத்தினை எமக்கு சமர்ப்பித்து ஒரு விண்ணப்ப படிவத்தினை எமக்கு தந்துள்ளனர்.
இது தொடர்பாக பிரதேச செயலாளரிடம் கேட்ட போது குறித்த குத்தகை இருப்பதாக தெரிவித்த போதும் அதனை இதுவரை பார்வையிடவில்லை. மேலும் அனுமதியற்ற இந்த வியாபார நிலையத்திற்கான நடவடிக்கையினை கட்டாயம் எடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.





