வீதிகளில் மிதக்கும் சடலங்களால் அதிர்ச்சியில் வாழும் மக்கள் : 2000 பேரின் பரிதாப நிலை!!

59

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு காரணமாக, கம்பளை-துனுகேஉல்ல பிரதான வீதியில் உள்ள இஹலகம மயானத்திலுள்ள சடலங்களின் எச்சங்கள் வெளி வந்துள்ளமையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மயானத்தில் புதைக்கப்பட்ட சடலங்களின் சிதைவுகள் சவப்பெட்டிகளுடன் பல நாட்களாக வீதியில் கிடப்பதால் அந்தப் பகுதி அச்சம் நிறைந்த பகுதியாக மாறியுள்ளது.

இது குறித்து உரிய அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்யப்பட்ட போதும், அதனை சரிசெய்ய இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த 27 ஆம் திகதி ஏற்பட்ட பேரழிவுடன் இந்த மயானம் மண்சரிவால் பாதிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

வீதி முடங்கியுள்ள காரணமாக துனுகேஉல்ல பகுதியில் சுமார் 2,000 பேர் வரையில் அந்த கிராமத்தில் சிக்கியுள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

அப்பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி குமாரி என்ற பெண் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார். மயானத்தில் புதைக்கப்பட்ட சவப்பெட்டிகளுடன் உடல்கள் மண் சரிவில் இருந்து வெளியே வந்து வீதியில் கிடக்கின்றன.

கிட்டத்தட்ட ஒரு மாதமாகிவிட்டது. இது குறித்து உடபலத்த பிரதேச செயலாளரிடம் தெரிவித்தோம். ஆனால் அது பலனளிக்கவில்லை.

இப்போது நாங்கள் உதவியற்றவர்களாக இருக்கிறோம். அழுகி, சேற்றில் கலந்த இந்த உடல்கள் ஆபத்தான நோய்களைப் பரப்பும் என அந்தப் பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளன.