
வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள சர்வதேச நிறுவனத்தின் பீட்சா உணவகம் இரண்டாவது தடவையாகவும் வவுனியா மாநகரபையினால் மூடப்பட்டுள்ளது.

உணவகம் அமைந்துள்ள குறித்த கட்டிடம் அனுமதிப்பத்திரத்திற்கு முரணாக அமைக்கப்பட்டுள்ளது, குடிபுகு சான்றிதழ் இன்மை, சுற்றுச்சூழல் உரிமம், வியாபார உரிமம் இன்மை என பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி கடந்த 2024.12.05 அன்று வவுனியா மாநகரசபையினால் உணவகத்தினை மூடி அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்தன.

இந்நிலையில் பல மாதங்களாக இயங்காத நிலையில் காணப்பட்ட இவ் பிரபல பீட்சா உணவகம் கடந்த இரு வாரத்திற்கு முன்பாக மீண்டும் வியாபாரத்தினை ஆரம்பித்த சமயத்தில் வவுனியா மாநகரசபை ஆணையாளர் சாந்தசீலனால் மீண்டும் அறிவித்தல் ஒட்டப்பட்டு உணவகம் மூடப்பட்டுள்ளது.

1982ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க மற்றும் 1984ஆம் ஆண்டின் 44ஆம் இலக்கச் சட்டத்தின் மூலம் திருத்தம் செய்யப்பட்ட 1978ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் குடிபுக சான்றிதழ் பெறப்படாமல் இயக்கப்படுவதாக தெரிவித்து குறித்த வர்த்தக நிலையத்தின் இரு பிரதான வாயில்களும் திறக்க முடியாத வண்ணம் வாயிலில் இவ் அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.






