
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் எர்மன்கோடு பகுதியில், அண்ணனுடன் விளையாட்டாக ஏற்பட்ட சண்டையில் வீட்டை விட்டு வெளியேறிய 6 வயது சிறுவன் சுஹன், குளத்தில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளான்.
எர்மன்கோடு பகுதியைச் சேர்ந்த முகமது அனீஸ் – துஹிடா தம்பதியினருக்கு ரயன் மற்றும் சுஹன் (6) என இரு மகன்கள் உள்ளனர். தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வர, தாய் துஹிடா ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.
நேற்று துஹிடா வெளியே சென்றிருந்த நேரத்தில், அண்ணன் ரயனுக்கும் தம்பி சுஹனுக்கும் இடையே டிவி பார்ப்பதில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சண்டையில் கோபித்துக் கொண்ட சிறுவன் சுஹன், அழுதுகொண்டே வீட்டை விட்டு வெளியேறியுள்ளான்.
மாலை வீட்டிற்குத் திரும்பிய தாய், சுஹன் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து அண்ணனிடம் விசாரித்தபோது, சண்டையிட்டு வெளியே சென்ற விவரம் தெரியவந்தது.
உடனடியாகத் தாய் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் சுஹன் கிடைக்காததால், காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் கிராம மக்கள் இணைந்து பல மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இறுதியில், வீட்டிலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு குளத்தில் சிறுவன் சுஹன் சடலமாகக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவனின் உடலை மீட்ட போலீசார், அதனைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
அண்ணனுடன் கோபித்துச் சென்ற சிறுவன், குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தானா அல்லது மன உளைச்சலில் குளத்தில் குதித்தானா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சிறிய விளையாட்டுத் தகராறு பிஞ்சுயிரைப் பறித்த இச்சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.





