
களுத்துறை, ஹொரண பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 23 வயதுடைய பசிந்து டிலான் பூர்ண மதநாயக்க என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.
நத்தார் தினத்தன்று நண்பர்களுடன் ஹொரண மஹிபாலான பகுதிக்குச் சென்ற டிலான், மதிய உணவிற்குப் பிறகு வெற்றிலை வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் கடைக்குச் சென்றுள்ளார்.
தலைக்கவசம் அணியாமல் பயணித்த டிலான், வளைவு ஒன்றில் திரும்பும்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்கால் மதிலில் மோதி விபத்துக்குள்ளானது.
தலையில் பலத்த காயமடைந்த அவரை நண்பர்கள் மீட்டு ஹொரண ஆதார மருத்துவமனையில் அனுமதித்த போதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
நான்கு சகோதரர்களில் மூத்தவரான டிலான், சிறுவயதில் துறவறம் பூண்டு பின்னர் குடும்பச் சுமையைத் தாங்குவதற்காக தொழிலுக்கு சென்றுள்ளார்.
உழைக்கும் பணத்தை தம்பிகளின் கல்விக்கும், பெற்றோரின் மருத்துவத்திற்கும் செலவிட்ட ஒரு தியாக உணர்வுள்ள இளைஞனை இழந்துள்ளதாக நண்பர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
உயிரிழந்த இளைஞனின் உடல் நேற்று பெலவத்தை பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





