இலங்கை இளம் கிரிக்கெட் வீரர் அக்ஷு பெர்னாண்டோ மரணம்!!

112

இலங்கையின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர் அக்ஷு பெர்னாண்டோ இன்று செவ்வாய்க்கிழமை (30.12.2025) காலமானார்.

2018ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்திலிருந்து கடந்த 7 வருடங்களாக தொடர்ச்சியான தீவிர சிகிச்சைக்குள்ளாகி வந்த அக்ஷு பெர்னாண்டோவின் மறைவு ஒரு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நியூஸிலாந்தில் 2010இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண் கிரிக்கெட் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அக்ஷு பெர்னாண்டோ,விளையாடி இருந்தார்.

2018 டிசம்பர் 28ஆம் திகதியன்று கல்கிஸ்ஸை கடற்கரைக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.

அன்றைய தினம் கடற்கரையில் நடைபெற்ற அணியின் பயிற்சி அமர்வில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றது. விபத்து இடம்பெற்ற காலப்பகுதியில் பெர்னாண்டோ தனது தலைமுறையினரில் மிகச் சிறந்த இளம் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.

தனுஷ்க குணதிலக்க, பானுக்க ராஜபக்ஷ, கித்ருவன் வித்தானகே ஆகியோருடன் அவர் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியில் இடம்பெற்றார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக லின்கன் விளையாட்டரங்கில் 2010இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் அக்ஷு பெர்னாண்டோ 52 ஓட்டங்களைப் பெற்றார்.

பம்பலப்பிட்டி புனித பேதுருவானவர் கல்லூரியில் கல்வி கற்ற அக்ஷு பெர்னாண்டோ 13, 15, 17 வயதுகளுக்குட்பட்ட அணிகளின் தலைவராகவும் 19 வயதுக்குட்பட்ட அணியின் உப தலைவராகவும் விளையாடினார்.

அவரது கிரிக்கெட் வாழ்க்கையும் உயிரும் துரதிர்ஷ்டவசமாக அகால முடிவுக்கு வந்ததை அடுத்து கிரிக்கெட் சமூகத்தினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.