
2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பகுதியை ஜனவரி 12 ஆம் திகதி மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, பரீட்சை தொடர்பான அனைத்து தொடர்புடைய விபரங்களும் அடங்கிய சுற்றறிக்கை இன்று (02) வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு கூறுகின்றது.
இந்த முடிவின்படி, ஜனவரி 12 ஆம் திகதி தொடங்கும் உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாட வினாத்தாள்களை ஜனவரி 20 ஆம் திகதி வரை நடத்த பரீட்சை திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக நாடு முழுவதும் உள்ள பரீட்சை மையங்கள் மீண்டும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், பரீட்சைகள் வழக்கமான நடைமுறையின் படி நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே பரீட்சை மையங்களுக்குச் செல்லும்போது தேவையான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுமாறும் அமைச்சகம் மாணவர்களைக் கேட்டுக்கொள்கின்றது.
மேலும், புதிய அட்டவணையின் விபரங்கள சுற்றறிக்கை மூலம் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் நாட்டை தாக்கிய டித்வா சூறாவளி காரணமாக, பல பகுதிகளில் மோசமான வானிலை நிலவியதை தொடர்ந்து அந்த நேரத்தில் நடைபெற்று வந்த உயர்தரப் பரீட்சையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பரீட்சைகள் திணைக்களம் முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





