சமூக ஊடக கணக்குகளை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை : குவியும் முறைப்பாடுகள்!!

41

இலங்கையில் 2025ஆம் ஆண்டில் சமூக ஊடக தவறான பயன்பாடு மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பான முறைப்பாடுகள் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (Sri Lanka CERT) தெரிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டில் மட்டும் இது தொடர்பாக சுமார் 12,650க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இணைய மோசடிகள், டிஜிட்டல் நிதி மோசடி மற்றும் இணையவழி துன்புறுத்தல்கள் (Cyber Harassment) ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள ஒரு பாரிய உயர்வாகும்.

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் முன்னணி தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருகா தமுனுபோல இது குறித்துத் தெரிவிக்கையில்,

பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளில் பெரும்பாலானவை போலி சமூக ஊடகக் கணக்குகள் (Fake Accounts), கணக்குகள் ஹேக் செய்யப்படுதல் (Hacked Accounts) மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் தொடர்பானவை என்று குறிப்பிட்டுள்ளார்.

இவை தவிர, வெறுக்கத்தக்கப் பேச்சுகள், ஆபாசமான அல்லது பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பதிவுகள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்புதல் போன்றவை தனிநபர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, இணையப் பாதுகாப்பு குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் புதிதாக இணையத்தைப் பயன்படுத்துபவர்களே இத்தகைய குற்றவாளிகளின் இலக்காக மாறியுள்ளனர்.

பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களையோ அல்லது வங்கி விவரங்களையோ இணையத்தில் பகிர வேண்டாம் என்றும், சந்தேகத்திற்கிடமான செய்திகள் மற்றும் இணைப்புகளை (Links) சரிபார்க்காமல் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சமூக ஊடகக் கணக்குகளுக்கு வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்துவதுடன், ‘இரு காரணி அங்கீகாரம்’ (Two-factor authentication) போன்ற பாதுகாப்பு வசதிகளைச் செயல்படுத்தி விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏதேனும் இணையவழித் தாக்குதல்கள் அல்லது மோசடிகள் நடந்தால், உடனடியாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு அமைப்பிற்குப் முறைப்பாடு அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.