மோட்டார் சைக்கிளும் காரும் ஒரே நேரத்தில் மோதியதில் பற்றி எரிந்த பேருந்து!!

285

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட்டில் உள்ள தனியார் ஷூ கம்பெனி பேருந்து இன்று காலை ஒரு பயங்கர விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊத்தங்கரை அருகேயுள்ள கொட்டுகாரம்பட்டி பகுதியில் இருந்து ஊழியர்களை ஏற்றிக்கொண்டு, மாதேஸ்வரன் (51) என்பவர் பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார்.

ஊத்தங்கரை நாட்டாண் கொட்டாய் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் திருவண்ணாமலையிலிருந்து பெங்களூரு நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று, பேருந்தை முந்திச் செல்ல முயன்றுள்ளது.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த பைக், கார் மற்றும் பேருந்து மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பைக்கை ஓட்டி வந்த நபர் தூக்கி வீசப்பட்ட நிலையில், திடீரென பைக் மற்றும் பேருந்து ஆகிய இரண்டுமே கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின.

பேருந்தின் முன்பகுதியில் தீ மளமளவெனப் பரவியதைப் பார்த்த ஊழியர்கள் மரண பயத்தில் அலறினர். நொடிப் பொழுதில் சுதாரித்துக் கொண்ட ஊழியர்கள், வாசல வழியாகவும், ஜன்னல்கள் வழியாகவும் கீழே குதித்து உயிரைத் தற்காத்துக் கொண்டனர்.

ஊழியர்கள் அனைவரும் கீழே இறங்கிய சில நிமிடங்களிலேயே பேருந்து முழுவதுமாகத் தீப்பற்றி எரிந்து எலும்புக்கூடாக மாறியது. இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாகப் பேருந்தில் இருந்த ஊழியர்கள் அனைவரும் உயிர் தப்பினாலும், முந்திச் செல்ல முயன்ற காரால் ஏற்பட்ட இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.