மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தவுள்ள தாழமுக்கம் : வடக்கு -கிழக்கில் நீடிக்கும் மழை!!

253

வங்காள விரிகுடாவில் இலங்கையின் பொத்துவிலுக்கு தென்கிழக்கு திசையில் 664 கி.மீ. தொலைவில் காணப்படும் காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று தற்போது நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக (Well Marked Low Pressure) மாறியுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள அவர், இது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கையின் கிழக்கு மாகாணக் கரையோரமாக வடக்கு நோக்கி நகர்ந்து, வடக்கு மாகாணத்தை அண்மித்து மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து தமிழ்நாட்டை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தாழமுக்கமும் இலங்கைக்கு மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. தற்போது வடக்கு, கிழக்கு, வட மத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களுக்கு பரவலாக மிதமான மழை கிடைத்து வருகின்றது.

எதிர்வரும் 08.01.2026 முதல் 12.01.2026 வரை வடக்கு, கிழக்கு, ஊவா, வட மத்திய, மத்திய மற்றும் தென் மாகாணங்கள் முழுவதும் மிக மிக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தங்களுக்கு வாய்ப்புள்ளது.

முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், திருகோணமலை, கிளிநொச்சி, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 8,9,10,11 ம் திகதிகளில் மிக மிக கனமழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் எதிர்வரும் 08.01.2026 முதல் 11.01.2026 வரை திரட்டிய மழைவீழ்ச்சியாக 450மி.மீ. க்கு மேல் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

எதிர்வரும் 08.01.2026 முதல் 13.01.2026 வரை வடமேற்கு, மேற்கு, சபரகமுவா மாகாணங்களுக்கு பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இது தற்போது தாழமுக்கமாகக் காணப்பட்டாலும் இலங்கைக் கரையை அண்மிக்கும் போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதனால் எதிர்வரும் 08.01.2026 முதல் கிழக்கு, வடக்கு வடமத்திய ஊவா மாகாணங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீ. இனை விட கூடுதலாக வீசக்கூடும்.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் என்பதனால் நிலச்சரிவு அனர்த்தங்களும் நிகழக்கூடும்.

வடக்கு, கிழக்கு, வட மத்திய, மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களின் மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாக அதிகாரிகள் முன்கூட்டியே மக்களுக்கு இந்தக் கனமழை தொடர்பிலும் வெள்ள அனர்த்தங்கள் மற்றும் நிலச்சரிவுகள் தொடர்பிலும் தெரியப்படுத்துவதன் மூலம் பாதிப்புக்களைக் குறைக்க முடியும்.

தயவு செய்து இந்த தாழமுக்கத்தினைச் சாதாரண நிகழ்வாகக் கருத வேண்டாம். மிக வேகமான காற்றோடு கூடிய மிகக் கனமழை (இடி மின்னலும் இணைந்ததாக) மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும்.

மிக முக்கியமாக இது தாழமுக்கம்/ தாழ்வு மண்டலத்தோடு இணைந்த நிகழ்வு என்பதனால் வழமையை விட கடல் மட்டம் மிக உயர்வாக காணப்படும்.

ஆகவே சாதாரண காலங்களில் வெள்ளநீர் கடலுக்குள் செல்வது போல இக்காலத்தில் வெள்ள நீர் கடலுக்கு செல்லாது. ஆகவே இதனையும் கருத்தில் கொண்டு அதிகாரிகள் செயற்படுவது சிறந்தது என குறிப்பிட்டுள்ளார்.